தனியார் விளம்பர நிறுவனம் சார்பில் பெருமாளை தரிசிக்க உகந்த மாதமான புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோவை அவினாசி சாலையிலுள்ள அரங்கு ஒன்றில் 108 திவ்யதேச தரிசனம் கண்காட்சி நடைபெற்று வருகிறது.இன்று துவங்கி வருகிற 15ம் தேதி வரையிலான 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பெருமாளின் 108 திவ்யதேசங்கள் என்றழைக்கப்படும் வைணவ திருத்தலங்களில் எழுந்ததருளியுள்ள பெருமாளின் உற்சவ மூர்த்திகள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 108 திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர்,கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருப்பதி திருவேங்கட சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.திருப்பதி திருவேங்கட சுவாமிக்கு தினசரி திருவாராதனை,நித்ய திருக்கல்யாணம்,ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.108 திவ்யதேசங்களில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும் ஒரு திருத்தலம் நேபாளத்திலும் உள்ள நிலையில் இவை அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இரண்டு திருத்தலங்கள் மண்ணில் வாழும் மனிதர்களால் காண முடியாது அது வின்னுலகில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காண முடியாத பல திருத்தலங்களை நேரில் தரிசித்த நிம்மதி இந்த ஆன்மீக கண்காட்சியில் கிடைத்ததாக பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.மேலும் ஏற்கனவே திருமால் திருத்தலங்கள் பலவற்றிற்கு சென்றுள்ள நிலையில் இந்த கண்காட்சியை கண்டு தரிசித்த பிறகு 108 திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்ல வேண்டும் என தோன்றுவதாகவும் கூறினர். மேலும் பத்து நாட்களும் தினந்தோறும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் ஆன்மீக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
Leave a Reply