கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 119 மனுக்களும் வீட்டுமனைப் பட்டா வேண்டி 284 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 11 மனுக்களும், 303 இதர மனுக்கள் என மொத்தம் 717 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தில் பட்டம் / பட்டயம் படித்த சிறப்பு பிரிவின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.90,000 திருமண நிதியுதவிக்கான தேசிய சேமிப்பு பத்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.96.011 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.6.66 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
Leave a Reply