கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசட் சொசைட்டி தன்னார்வ தொண்டு அமைப்பு “பொறியியல் தொழில்நுட்பம்” படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோரின் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றது. படித்த பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு, அவர்கள் துறை சார்ந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திறன் மேம்படுத்தும் பணிகளை அளித்து வருகின்றது. உள்நாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்தி வருகின்றது. இந்த நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் “அசட் சொசைட்டி அமைப்பு” சார்பில், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை உள்ளடக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து அசைட் சொசைட்டி அமைப்பின் தலைவர் ஆனந்த் தயாள குரு கூறும்போது ”நான் முதல்வன் திட்டம்” தந்த உத்வேகத்தின் அடிப்படையில், அதனை முன் மாதிரியாக கொண்டு, படித்த பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆர்கிடெக்ட், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பொறியில் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து வருவதாக தெரிவித்தார். நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு அவர்களை தயார்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சியும் வேலைவாய்ப்பு பெற்று தரும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், நடப்பாண்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும், ஆயிரம் நபர்களை தொழில் முனைவோராக உருவாக்கவும் அசட் சொசைட்டி சார்பில் திட்டமிட்டிருப்பதாகவும் 100% வேலை வாய்ப்பை பெற்று தர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசாங்கத்தின் நான் முதல்வன் திட்டத்துக்கு நன்றி தெரிவித்த அவர், இதுபோன்ற திட்டங்களில் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் டிரில்லியன் டாலர் எக்கானமி கனவை நனவாக்கும் விதமாக அனைவரும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்தார். நாட்டின் அனைத்து துறைகளில் பொறியியல் தொழில்நுட்பம் பெருமளவில் பங்காற்றும் நிலையில், இத்துறை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி நாட்டின் தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என தெரிவித்தார் . நமது நாட்டில் உள்ள பட்டதாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையிலே, எங்களை போன்ற தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்த பயணிக்கும் போது எளிதாக இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார் .
Leave a Reply