அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடுகளால் பார்வை குறைபாடு முதல் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் “கண் தானம்” குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்தில் கோவை சரவணம்பட்டி, பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி மற்றும் வடகோவை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மனித சங்கிலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் கண் தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இது போன்ற நிகழ்ச்சிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா, கண்களை தானம் செய்வதால், பார்வையற்ற பலரின் வாழ்வில் ஓளியேற்ற முடியும் என்ற நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெயஸ்ரீ, உட்பட பலர் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் கலந்து கொண்ட பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் ‘உங்கள் கண்கள் வேறோருவரின் உலகமாக அமையட்டும்’,”கடவுளின் பரிசை ஏன் அழிக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அணி வகுத்து நின்றனர்.
Leave a Reply