கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் மகளிர் உரிமைத் திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான ரூபே கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் பேசி வருகிறார் எனவும், இன்று ஒரு கோடிக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு இந்த திட்டம் சென்றடைகிறது என்றார்.
மனுக்களை பெற்று ஆய்வு செய்து ஒரு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என கூறிய அவர், விட்டுப்போனவர்கள் மேல் முறையீடு செய்யவும் முதல்வர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றார். பிறமாநிலங்களும் தமிழக திட்டங்களை பார்த்து அதை செயல்படுத்த முயல்கின்றனர் என தெரிவித்தார். பலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று முதல் பணம் சென்று கொண்டு சேர்ந்து வருகின்றது எனவும் மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் விடுபட்டவர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும் மொத்தமாக வந்தவுடன் தான் புள்ளி விபரங்கள் கிடைக்கும் என்றவர் மாவட்ட வாரியாக தகவல் கொடுப்பதற்கு சிறிது காலம் வேண்டும் என்றார். ஒரு சில இடங்களில் பயனாளிகளின் தகவல்கள் கேட்கப்படுகிறது. ஈரோட்டில் அது போன்ற தகவல் வந்தது. யாரும் தகவல் கேட்டால் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தவர், இது தொடர்பாக பயனாளிகள் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பயனாளிகள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
Leave a Reply