பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை அன்பளிப்பாக அளித்த நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள கோபாலசாமி நாயுடு பள்ளிக்கு சென்ற அவர், அப்பள்ளி மாணவ மாணவியருடன் விஞ்ஞானம் குறித்து கலந்துரையாடினார். 

நிகழ்வின் போது பேசிய அவர் சந்திராயன் வெற்றி நமக்கு மிகவும் பெருமை அளிக்கும் ஒன்று என்றும் தமிழகத்தை சேர்ந்த பலரும் சந்திராயன் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.  மேலும் சந்திராயன் மினியேச்சர் மாடலை பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அவர் பள்ளி மாணவர்களுக்கு அதனை பரிசாக அளித்தார்.

பின்னர் அப்பள்ளியின் முன்னாள் மாணவி சந்திர பிரபா தற்பொழுது இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நிலையில் அவர் வடிவமைத்த சாட்டிலைட் மாடல் ஒன்றை பள்ளி நிர்வாகத்தினர் மத்திய நிதி அமைச்சருக்கு காண்பித்தனர். மேலும் அப்பள்ளியை சேர்ந்த  ஹரிஸ் என்ற மாணவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வந்ததை தொடர்ந்து அம்மாணவருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார் பாராட்டினார். 

முன்னதாக அப்பகுதியில் தூய்மை பாரத திட்டத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading