கோவையிலிருந்து மதுக்கரை வனப்பகுதி வழியாக 10க்கும் மேற்பட்ட ரயில்கள் கேரளாவுக்கு செல்கிறது. இதில் எட்டிமடை அருகே தண்டவாளம் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதால் அடிக்கடி ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. அதைத் தடுக்க மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக தற்போது காட்டு யானைகள் மிகவும் எளிதாக சென்று வருகின்றது.
இன்னிலையில் மதுக்கரை ரயில் நிலையம் அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை அருகே வரை 3.5 கி.மீ. தூரத்துக்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து ஊருக்குள் உலா வருகின்றன. இதனை தடுக்க மதுக்கரை பகுதியில் 3.5கி.மீ தூரத்திற்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1கி.மீ. தூரத்துக்கு இதுபோன்ற இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நல்ல பலன் கிடைத்து உள்ள நிலையில் மேலும் 3.5 கிமீ தூரத்திற்கு இரும்பு தடுப்பு அமைக்க எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு வந்த நிதி ஒதுக்கப்பட்டதும், ரயில்வே நிர்வாகம் மூலம் தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு கம்பிகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
Leave a Reply