கோவையில் அரிய வகை வெள்ளை நாகம் (particial albino cobra)பிடிபட்டது.

மாறிவரும் பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக யானை, கரடி போன்ற வனவிலங்குகளும், பறவைகளும், பாம்புகளும் தங்களது வாழ்விடத்தை இழந்து வருகின்றன. இதன் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றி போன்றவைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவதும் உணவிற்காக விளை பொருட்களை உண்பதும் சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அதிக விஷத்தன்மை கொண்டு பாம்புகள் தீண்டி பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் நடந்து வருகிறது.

இன்னிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த அரிய வகை நாகப்பாம்பு பிடிபட்டது. தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிரப்ப சென்ற அந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதை கண்டார். அதனைப் பார்த்ததும் உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற மோகன் பாம்பை பார்த்ததில் அந்த பாம்பானது மிகவும் அடர்  வனப்பகுதியில் உலா வருகின்ற உலகின் மிகவும் அரிதான (partcial albino cobra) வெள்ளை நாகம் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அரிய வகை வெள்ளை நாகம் பத்திரமாக பிடிக்கப்பட்டது. இரண்டடி நீளம் கொண்ட இந்த பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்ட நிலையில் மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் என்பதனால் இனி பாம்பு பொது இடங்களில் வெளியே உலாவும் வாய்ப்புள்ளது எனவே குடியிருப்பு பகுதிகளில் பாம்பு இருப்பதை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பாம்பு பிடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading