ஈஷாவில் நவராத்திரி திருவிழா! அக்டோபர் 15 முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா நாளை (அக்டோபர் 15) முதல் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி அடுத்த ஒன்பது நாட்களுக்கான விழா ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியது. நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனிமனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச்சிறப்பு மிக்கதொரு கொண்டாட்டமாகும். ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவியின் அளப்பரிய அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது. 

அதன்படி, இந்தாண்டு, நவராத்திரி விழா ஈஷாவில் நாளை முதல் பெரு விமர்சையுடன் தொடங்குவதையொட்டி, லிங்கபைரவி தேவி கோவிலில் ஒன்பது நாட்களும் நவராத்திரி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவியின் அளவற்ற அருளையும், சக்தியையும் உணரும் விதமாக, சிறப்பு உச்சாடனங்கள், அர்ப்பணங்கள், நவராத்திரி அபிஷேகம், மஹா ஆரத்தி என நவராத்திரியின் ஒவ்வொரு இரவும் உற்சாகம் ததும்பும் திருவிழாவாக நடக்க இருக்கிறது. இந்த விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.  நவராத்திரியின் ஒன்பது நாட்களும், லிங்கபைரவி தேவிக்கு மூன்று விதமான அலங்காரம், அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. 

அதன்படி முதல் மூன்று நாட்கள் தேவி குங்கும அபிஷேகத்தில் அருள் பாலிப்பார்.  மேலும்,  நவராத்திரியின் முதல் நாளான நாளை புராஜெக்ட் சமஸ்கிருதி வழங்கும் “த்ரிதேவி” நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான திங்கள் அன்று சிவராஜ் ராவ் குழுவினரின் “காவடியாட்டம்” நடைபெறவுள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரையில் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள சூரிய குண்டம் மண்டபத்தில் நடைபெறும்.

Loading