மத்திய அரசின் சேவை தேர்வு வாரிய நேர்க்காணலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த பயிலரங்கு கோவையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கொமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர எஸ்.எஸ்.பி எனப்படும் சேவை தேர்வு வாரிய நேர்க்காணலை எதிர்கொள்வது அவசியம். இதனிடையே என்.சி.சி குரூப் கேடர்களாக உள்ள மாணவர்கள் மத்தியில் எஸ்.எஸ்.பி நேர்க்காணலை எதிர்கொள்ளும் பயிலரங்கு கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி கேடர்களாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் என்.சி.சி இயக்குநரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கொமடோர் அதுல் குமார் ரஸ்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் எஸ்.எஸ்.பி தேர்வு முறை, அதனை எதிர்கொள்ள தேவைப்படும் யுக்திகள் குறித்து விளக்கினார். இது குறித்து அதுல்குமார் ரஸ்தோகி கூறியதாவது, தமிழ்நாடு என்சிசி இயக்குனரகம் தேசிய அளவில் மதிக்கப்படுகிறது.
குறிப்பாக கோயம்புத்தூர் குழுமத்தில் உள்ள கேடர்கள் தேசிய மற்றும் இயக்குனரக அளவில் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். ஆயுதப்படையில் சேர மக்களை ஊக்குவிப்பது என்.சி.சி-யின் நோக்கங்களில் ஒன்றாகும். அந்த முயற்சிகள் வெற்றியடைய, செயல்முறைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது முக்கியம். எஸ்.எஸ்.பி தேர்வு முறையில் எனது அனுபவங்கள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன் என கூறினார்.
Leave a Reply