பூலுவபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தரைத்தளத்தில் மட்டுமே வீடு கட்டித்தரக்கோரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்த மக்கள்.

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது, கல்வி உள்பட பத்து திட்டங்களை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதியும் செய்து தர இருக்கின்றனர். இன்னிலையில் கோவை, பூலுவபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 302 குடும்பங்கள் வசித்து இருக்கின்றனர். 

புதிதாக திருமணம் ஆனவர்கள் உட்பட 320 பேருக்கு, புதிய வீடுகள் கட்டித்தர அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வீடு கட்டுவதற்கான ஆய்வு அரசுத்துறை சார்பில் தற்போது, நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும்,குடும்பங்களுக்கு எப்படி வீடுகள் கட்டித்தரப்படுகிறதோ, அதே மாதிரி தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அவர்களை சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பூலுவபட்டி மறுவாழ்வு முகாமில் வசிக்கும் திலக்ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது தமிழகம் முழுவதும் 7500 வீடுகள் கட்டித்தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் அனைத்து இடஙகளிலும் தரைத்தளத்தில் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன. 

ஆனால் பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமில் 320 வீடுகள் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என கட்டித்தரப்பட இருக்கிறது. முதல் தளம் கட்டினால் மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் , குழந்தைகள், நோயாளிகள், அதிகமானோர் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். மேலும் சட்ட பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. மற்ற பகுதிகளை போல தரைத்தளத்தில் மட்டுமே வீடு கட்டிக்கொடுக்கவும், இடம் இல்லையென்றால், 10 கி மீ சுற்றளவுக்குள் இடம் வாங்கி கட்டித்தர கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

Loading