கோவை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார் குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த இரண்டு சிலைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த சிலைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் நமது வரலாற்றை பறைசாற்றும் வகையிலும் பொது மக்கள் பார்வைக்கு அழகாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தனியார் பங்களிப்புடன் இவை அமைக்கப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் தனியார் அமைப்பினர் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்தார். கோவையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயங்கள் நடைபெறுவதை பறைசாற்றும் வகையில் இந்த இரண்டு சிலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கோவை மாநகரில் சிக்னல்களை எடுத்துவிட்டு ரவுண்டானாக்களை அதிகாரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு வருவதாகவும் இந்நிலையில் இது போன்ற சிலைகள் மக்களின் பார்வைக்கு அழகான ஒன்றாக அமையும் என்றார்.
குறிச்சி பகுதியில் திருவள்ளுவர் சிலை இன்னும் சில நாட்களில் திறக்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். மழை வரும் பொழுது சில இடங்களில் நீர்வழிப் பாதைகள் சுத்தமாக இல்லாததால் குளங்களுக்குச் சென்றடையாமல் இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், நீர்வழி பாதைகள் அனைத்தையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரடியாக கள ஆய்வு செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு நன்கு மழை பெய்ததால் அனைத்து குளங்களும் ஏறத்தாழ நிரம்பி உள்ளது எனவும் இனி வரும் நாட்களில் மழை நீர் அனைத்தும் குளங்கள் ஏரிகளுக்கு சென்றடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Leave a Reply