மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – சிபிஎம்  பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி பேட்டி.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவுக்கும் சாதகமாக கருத்துக் கணிப்புகள் அமைந்திருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்றாலும் சில மாநிலங்களில் சாதகமாகவும், சில மாநிலங்களில் சாதகமற்ற நிலையிலும் இருக்கிறது. எனினும் இவை மாறுதலுக்கு உட்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் கீழ் இந்தியாவில் வேலை இழப்பு அதிகரித்துள்ள அதே வேலை பணவீக்கமும் அதிகமாக உள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பிரச்சனை பிரதிபலிக்கும். பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர்கள், பழங்குடியினர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஜி 20 மாநாட்டில் இந்தியா தலைமை வகித்ததால், முன்னிலை வகிப்பதாக பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் ஜி.டி.பியில் 20வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் இந்தியா உள்ளது என்றார். யுனெஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்றவர் இந்திய நாட்டு மக்களுக்காக இந்தியாவுக்காக பாசிச சக்தியான பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்றார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் தமிழகத்தில் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்படும் என்றார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை எட்டும். இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என்றார். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மிரட்ட ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. கேரளாவில் 8 மசோதாக்களை கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிலை நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

Loading