ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு இன்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனசரகங்களில் குளிர்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.
முன்னதாக வன விலங்குகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அட்டக்கட்டியில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதையடுத்து கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 67 நேர்கோட்டு பாதைகளில் 248 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலும், உலாந்தி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் சுந்தரவேல் தலைமையிலும், மானாம்பள்ளியில் வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வால்பாறையில் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையிலும் இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. வனவிலங்குகள் நேரில் பார்ப்பது கால்தடம், எச்சம் போன்றவற்றின் அடிப்படையில் தகவல்கள் தயாரிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply