புத்தாண்டு கொண்டாட்டம்: கோவை வாலாங்குளத்தில் நடைபெற்ற லேசர் ஷோ. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குளத்தைச் சுற்றிலும் புத்தாண்டை நள்ளிரவு 12 மணியளவில் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சார்பில் இரவு 12 மணி வரை லேசர் கண்களை பறிக்கும் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. இதில் புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 300 டிரோன் கேமராக்கள் பறக்கவிடபட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர்.

வாலாங்குளத்தில் பாலத்தின் மீது பட்டாசுகள் வரிசையாக வெடிக்க வைத்து காண்போரை வியக்கும் அளவில் பட்டாசுகள் வான வேடிக்கை இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பல ஆயிரம் கணக்கான மக்கள் கண்டுகளித்ததுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். குழுக்களாக வந்த பொதுமக்கள் கேக் வெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோவை வாலாங்குளம் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிகமான மக்கள் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக பல பகுதிகளில் அவசர ஊர்திகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் திணறின. மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று கவரும் வகையில் மியூசிக் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதுமட்டும் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் பயன்படுத்தி டிரோன் ஷோ முதல் முறையாக நடைபெற்றது. மைதானத்திற்குள் மதுபானம் மற்றும் போதை பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க அனைத்து பைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கபட்டனர். கோவை மாநகர் பகுதியில் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் அசம்பாவிதம் தடுப்பதற்கு கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். இருசக்கர வாகனங்கள் சாகசம் செய்ய வேண்டாம் எனவும் மீறினால் கடுமையாக நடவடிக்கு எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வந்தனர். வாலாங்குளம் பகுதியில் வெளிநாட்டு பறவைகள், நாரை, கொக்கு, பெலிகன் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாக இருக்கும் வாலாங்குளத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என பல்வேறு சுற்று சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் வாயுள்ள ஜிவன்களால் வாயில்லா ஜீவன்கள் துன்பத்திற்காளாகின என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  வணிக வளாகங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளும், திரைப்பட நடிகைகள் நடிகர்கள், பாடகர்கள் கலந்துகொண்ட  இசை நிகழ்ச்சிகளும் நடத்தபட்டது.

Loading