கோவையில் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் 3.44 கோடிக்கு புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல பகுதிகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை  மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட அசோக் நகர் பிரதான சாலை, வாசுகி வீதி, வேலவன் நகர், தங்கம்மாள் நகர், ஸ்ரீதேவி நகள் பிரதான சாலை, மருதமலை கவுண்டர் லே-அவுட், தாகள் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினையும், வார்டு எண் 1க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் அரிஜன காலனியில் உள்ள சமுதாய கூடத்தை ரூ.14.60 இலட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் பணி இன்று துவக்கபட்டது. 

அதேபோல் வார்டு எண். 10க்குட்பட்ட வெற்றி நகரில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியினையும் மற்றும் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.18.90 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும்  மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். முன்னதாக, வடக்கு மண்டலம் வார்டு எண். 10க்குட்பட்ட தந்தை பெரியார் நகரில் தூய்மை இந்தியா திட்டம் (2.0) கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தினை, திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட வி.எல்.கே.கார்டன் பி.எஸ்.ஜி.லே-அவுட் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் தான் தளம் புதுப்பித்தல் பணியினையும், வார்டு எண்.7க்குட்பட்ட இளங்கோ நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும் மற்றும் வார்டு எண்.23க்குட்பட்ட பூங்கா நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளின்போது, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Loading