கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் தனியார் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அவர் அரங்கில் அதிகமான மகளிரை பார்க்க முடிகிறது எனவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் நாடு பல மாற்றங்களை கண்டுள்ளதாகவும் கூறினார். நாட்டில் அதிகப்படியான மக்கள் தொகை இருந்தாலும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது இந்தியா என்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடு முதன்மையாக விளங்கி வருவதாக கூறியவர் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடத்தில் இந்தியா இருக்கிறது என்றார்.
இது தான் புதிய பாரத் என கூறிய அவர் பிரதமர் மோடி பெண்களின் வளர்ச்சிக்கும், ஆளுமைக்கும் அடித்தளம் அமைத்தார் என்றும் பெண்கள் தொழில் துறையில் சிறந்து விளங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முத்ரா திட்டத்தின் மூலம் 23 லட்சம் கோடி தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பெண்கள் வீட்டின் உரிமையாளராக மாறியுள்ளனர் எனவும் ஆளுநர் கூறினார். இன்று நாட்டில் பெண்கள் நிலவுக்கும், சூரியனுக்கும் விண்கலத்தை செலுத்தி வருகின்றனர் எனவும் பெண்களின் வளர்ச்சி நாட்டின் வலிமையாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கூறிய அவர் அடுத்த சில மாதங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போவதாகவும் முதல் முறை வாக்காளர்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை வாங்கவில்லை என்றால் விரைந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் உங்களின் முக்கியமான கடமையை ஆற்றுவதற்காக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கேட்டு கொண்டார். மாணவர்களிடம் 100% வாக்குகளை எதிர்பார்ப்பதாகவும் இந்தக் கல்லூரி மாணவர்கள் 100% ஜனநாயக கடமையை ஆற்றினால் ஆளுநர் மாளிகைக்கு உங்களை அழைத்து பாராட்டுவேன் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply