கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சந்திப்பு யாத்திரை என்ற பெயரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வாகன பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த வாகன பேரணி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து விமான மூலம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி , விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சாய்பாபா கோவில் பகுதிக்கு வந்தடைந்தார். சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து வாகன பேரணி நிகழ்வானது துவங்கியது. சாலையின் இரு புறமும் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் , நீலகிரி ஆகிய மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து வடகோவை , சிந்தாமணி வழியாக ஆர் எஸ் புரம் வரை 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகன பேரணி நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாலையின் இரு புறமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும் மத்திய அரசின் திட்டங்களும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. அவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்ட பின் பிரதமர் மோடி பயணித்த வாகனம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் அருகே வந்தடைந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் நரேந்திர்மோடி,ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே கடந்த 1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

அப்போது 1998 குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகளை பிரதமர் மோடியிடம் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விளக்கினார். அவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி , எஸ்.ஆர்.சேகரை தட்டிகொடுத்தார். பின்னர் ஆர்.எஸ் .புரத்தில் இருந்து பிரதமரின் வாகனம் ரெட்.பீல்டு பகுதியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை சென்றடைந்தார். இன்று இரவு பிரதமர் மோடி அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கின்றார். நாளை காலை கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் பாலக்காடு செல்கிறார். அங்கு நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி , பின்னர் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் சென்று நாளை பிற்பகல் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். கோவைக்கு இன்று பிரதமர் வருகையை முன்னிட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரதமர் பங்கேற்ற இடங்களில் தங்கும்.அரசு விருந்தினர் மாளிகை, விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு.மட்டுமின்றி பிரதமரின் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பிரதமர் மோடியின் “ரோடு ஷோ” நிகழ்வில் பிரதமருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் உடன் வந்தனர். ரோடு ஷோ  நிறைவு செய்யப்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராசா, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக ஆர்.எஸ்.புரத்தில் வைக்கப்பட்டு இருந்த அஞ்சலி பேனரில், குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த 45 பேரின் பெயர்களுடன் பேனர் வைக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்த 7 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும் பேனர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக,  அயோத்தியா ராமர் கோவில் கட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும் இடமான ஆர்.எஸ். புரம் பகுதிக்கு சிவனடியார்கள் வந்தனர். சர்வ சித்தர்கள் கூட்டமைப்பு, மேன்மை கொள் சைவநீதி சிவனடியார் திருக்கூடம் ஆகிய அமைப்புகள் சார்பில் காவி உடை அணிந்த கோவையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50 க்கும்  சன்யாசிகள் பங்கேற்பு.  இதில், ஒருவர் ஆணி கால் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Loading