சிறுவாணி அணையின் நீர்மட்டம் 18 அடியாக சரிவு.

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கோவைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 18 அடியாக சரிந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் நகரை ஒட்டியுள்ள இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை நீர் உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம் எல் டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு மேல் உயராமல் இருந்தது. இதனால் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை உயர்ந்தது அதற்கு மேல் நீர்மட்டம் உயரவில்லை. 

ஜனவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் 23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 18 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது இதனால் மாநகர பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Loading