தங்களது கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்கிறதோ அந்த கட்சிக்கு ஆதரவு காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவிப்பு.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 100% வாக்களிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்ரமணியம், தற்போது வரை தேர்தல்களில் 60 முதல் 65 சதவிகிதம் வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான  அண்ணாமலை பங்கேற்றதாகவும் அண்ணாமலையிடம் இந்து முன்னணி சார்பில் பசுவதை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும், மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும், போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வழங்கி இருப்பதாகவும் இதே கோரிக்கைகளை அனைத்து அரசியல்களுக்கு இந்து முன்னணி சார்பில் வழங்கியுள்ள நிலையில் எந்த கட்சி தங்கள் கோரிக்கைகளை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த முன் வருகிறதோ அந்த கட்சிக்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கும் எனவும் குறிப்பிட்டார். 

அதிமுகவோ, திமுகவோ இந்த கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கும் தங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் எனவும் ஏற்கனவே சென்னையில் திமுக வேட்பாளர் ஒருவரை இந்து முன்னணி ஆதரித்திருந்ததாகவும் அந்த வேட்பாளர் தற்போது மறைந்து விட்டார் எனவும் சுட்டி காட்டினார். மேலும் பாஜகவுக்காக ஒருபோதும் இந்து முன்னணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாது எனவும் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்று தான் கூறியுள்ளோமே தவிர பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அமைப்பில் உள்ளவர்களை நாங்கள் வலியுறுத்த வில்லை எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

Loading