கோவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த அண்ணாமலை.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் தாக்கல் செய்தார். முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோருடன் சுவாமி தரிசனம் செய்தனர். 

இதனைத்தொடர்ந்து அண்ணாமலை, கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக வந்தார்.  தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து வேட்பாளர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Loading