பொய் சொல்வதில் அண்ணாமலை பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார் என கனிமொழி பேச்சு!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி துடியலூர், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். சூலூர் திருச்சி சாலையில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், பிரதமர் மோடி கோவை பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சிம்மன சொப்பனமாக உச்சி சூரியனாக தகித்துக் கொண்டிருக்கிறார். 

அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளதாக கூறுகிறார், 5 வயதில் இருந்து தினமும் 2 புத்தகங்கள் படித்தால் கூட இதுநாள் வரை 20,000 புத்தகங்கள் படித்திருக்க முடியாது, அண்ணாமலை பொய் சொல்வதில் வளர்ச்சி அடைந்து பி.எச்‌.டி பட்டம் பெற்று விட்டார். தமிழகத்தில் புயல் மழை, உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது வராத பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார், இது அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது. இவ்வாறு தமிழகத்தில் சுற்றி சுற்றி வருவதனால் இரண்டாம் இடத்திற்கு வர முடியுமா என முயற்சி செய்கிறார்கள். உண்மையில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. தற்போது கடும் வெயில் நிலவுகிறது இதற்கு காரணம் ஒன்றிய அரசு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கப்பல்படை தளம் அமைக்கின்றனர்.  

சுற்றுப்புற சூழல் மற்றும் கிளைமேட் சேஞ்ச் ஆகியவற்றிற்கு காரணம் பாஜகதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை நிறைவேற்றி விவசாயிகளை வஞ்சிக்கிறது, கல்விக்கடனை ரத்து செய்ய மறுக்கிறது.  ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 60ஆயிரம் கோடி கடனை ரத்து செய்கிறார்கள். சுகாதாரத் துறையில் ஆயுஷ்மான் பாரத் என்கிற பெயரில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.  ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு ஆபரேஷன் செய்வதாக காட்டி பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். இது மாபெரும் ஊழல் ஆகும். இந்தியாவில் 2 மாநில முதல்வர்கள் தற்போது சிறையில் உள்ளனர். மிரட்டியே பணிய வைக்க முயற்சிக்கிறது பாஜக. பாஜக மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றினால் அதற்கு துணை போனது அதிமுக. சாமானிய மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என நுழைவுத் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் 450 ரூபாயாக இருந்த கேஸ் விலை தற்போது ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து விட்டது. 

70 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை 500 ரூபாய் ஆகவும் பெட்ரோல் விலை ரூ.70 ஆகவும் டீசல் விலை ரூ.60 ரூபாயாகவும் குறைக்கப்படும். தேர்தல் முடிந்தவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த பரப்புரை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் ஒன்றிய செயலாளர் மன்னவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் இடைக்குழு செயலாளர் ஏ.சந்திரன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Loading