நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எதிர்வரும் நாடாளுமன்ற பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, கடந்த மாதம் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், சில தனியார் மற்றும் பொது அமைப்புகள் நடத்தக்கூடிய உள்ளரங்கு கூட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெறவேண்டும்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கப்பதற்காக தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று, அது தொடர்பாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்ட பின்னரே ஒட்டப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற விவரத்தினை மூன்று நாட்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் அனுமதி பெறாமல் ஒட்டினால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகவே பார்க்கப்படும் என்பதோடு தேர்தல் நடத்தைவிதிகளை மீறியமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply