கோடை வெயிலை முன்னிட்டு தடையில்லா குடிநீர் கிடைக்க மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்  கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள்,ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் கள ஆய்வுமேற்கொண்டு உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும்,பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தொய்வின்றி கிடைக்கவும் பணியாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யபடுகின்றதா என்பதை கண்காணித்திட வேண்டும். கூடுதல்குடிநீர் தேவையுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீரின் தேவை மற்றும் சிக்கனத்தினை குறித்து பொது இடங்களில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Loading