கோவையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், இல்லத்திற்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 2570 மூத்த குடிமக்கள் மற்றும் 424 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதே போன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 2085 மூத்த குடிமக்கள் மற்றும் 567 மாற்றுதிறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது.
மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க Poll Officer தலைமையின் கீழ் Micro Observer அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு 15, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10, கவுண்டம்பாளையம் 15, கோவை (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10, கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதிக்கு 10, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 குழுக்களும் என மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு 10, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு 14, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு 10, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 10, உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு 21,வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு 10/என மொத்தம் 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் 5, 6, 9 ஆகிய தேதிகளில் மேற்படி வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம். படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச் சாவடிக்கு நேரில் சென்றுவாக்களிக்க இயலாது. எனவே தபால் வாக்கிற்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்கஏதுவாக அவர்களது வீட்டிலேயே இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply