கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களை கூறி ராஜினாமா செய்தார். இன்னிலையில் காலியாக கோவை மாநகராட்சி மேயர் பதவியை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சி கூட்டம் நடத்தி மேயரை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தான் மேயர் வேட்பாளராக அறிவிக்கபடுவோம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். ஏமாற்றத்துடன் வெளியே வந்தவர் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கண்ணீர் மல்க காரில் புறப்பட்டு சென்றார்.
Leave a Reply