கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 18-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.கே.டி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு.சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கணிதம், கணினி அறிவியல், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு, உடற்பயிற்சி மற்றும் சிறப்புக் கல்வி ஆகிய 4 துறைகளைச் சேர்ந்த 228 மாணவ மாணவிகளுக்கு மத்திய இணை அமைச்சர் பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் பேசுகையில், ‘ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் கல்வியோடு சேர்த்து சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்று அறிவியலோடு சேர்த்து நமது பாரம்பரியத்தையும், தத்துவங்களையும் கற்பிக்கும் பொறுப்பு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது வெறும் புத்தகத்தில் படிப்பது மட்டுமல்ல, நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்துவது எனக் கூறுகிறார். மனதை ஒருநிலைப்படுத்துவது மிக முக்கியம் என்கிறார். அது அவ்வளவு சுலபமானது அல்ல. சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி நமது பாரத பிரதமர் நமது நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் மிகவும் முக்கியமான ஒன்று புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டம் ஆகும்.
இதன் மூலம் நவீன கல்விக்கான தொழில்நுட்ப அறிவு மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். ஜி20 மாநாடு, சந்திராயன்3 என பல முக்கியமான சாதனைகளை இந்த ஆண்டில் நமது நாடு செய்துள்ளது. இந்தியாவின் தேசியக்கொடி பெருமைப்படும் விதமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பறந்து வருகிறது. பிரதமர் மோடி கூறியது போல் அடுத்த 25 ஆண்டுகளில் துடிப்புமிக்க புதிய இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும். கல்வி அறிவிலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும், சுதந்திரமாக செயல்படுவதிலும் அவர்கள் முன்னோடியாக திகழ வேண்டும்.
அதே நேரத்தில் நம்முன் பல சவால்களும் உள்ளன. அதையும் தாண்டி தான் இந்தியர்கள் தற்போது உலக அளவில் புதிய சாதனைகளை புரிந்து வருகின்றனர். வலுவான கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதோடு நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாம் பாதுகாத்திட வேண்டும். பாரதப் பிரதமர் பாரம்பரியமிக்க நமது தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வித் துறையில் புதிய திட்டங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஐ.கே.எஸ் எனப்படும் Indian Knowledge System. இது 64 இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அனைவரும் கோரக்பூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள ஐ.கே.எஸ் இடத்தை பார்வையிட வேண்டும். நவீன அறிவியல் கண்டுபிடித்த, முன்வைத்த பல விஷயங்களையும் கோட்பாடுகளையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகளும் முனிவர்களும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை நாம் எப்போதும் பாதுகாத்திட வேண்டும்.’ என கூறினார். மேலும் இந்த மாணவர்களோடு மத்திய இணை அமைச்சர் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
Leave a Reply