ராபி பருவம் பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடு.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-24 ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதனை கோவை

மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட 2016-17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி தற்போது விவசாயிகள் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சோளம் மக்காசோளம் மற்றும் கொண்டைகடலை பயிர்களுக்கு தற்போது அறிவிக்கை பயிர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு வருடம் யுனிவர்சல் சாம்போ பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகவே, கோவை மாவட்ட விவசாயிகள் அக்டோபர் 2023 முதல் சாகுபடி செய்யப்படும் சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.144.75/- கட்டணமாக செலுத்தி 15.12.2023 வரையிலும், கொண்டை கடலைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.210/- செலுத்தி 15.11.2023 வரையிலும் மற்றும் மக்காசோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519.75/- கட்டணமாக செலுத்தி 15.11.2023 இறுதிவரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்காக விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் எண் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியஆவணங்களுடன் பொது இ- சேவைமையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு, கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையினை செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் பயிர்காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading