நிதிக்கழக உதவியில் தொழில் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் 51 தொழில் முனைவோர்களுக்கு கோவையில் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலீட்டு கழகம் சார்பில் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் இந்திய தொழில் முதலீட்டு கழக கூட்டமைப்பின் 9-வது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலர் (மாநில தொழில் வளர்ச்சி) மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கடந்தாண்டு நிதிக்கழக உதவியில் தொழில் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் 51 தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கினார்.
இதனையடுத்து உரையாற்றியவர், தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளிகள் அதிகம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. அரசு சார்ந்த நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிக்கோ), தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிஐஐசி), தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்தி வருகின்றன. 2023-24 ஆம் ஆண்டுக்கான தற்போதைய மாநில விலை குறியீடு (ஜிஎஸ்டிபி) 28.30 ட்ரில்லியன் அதாவது 3 42.82 லட்சம் அமெரிக்க டாலராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.66% உயர்ந்துள்ளது.
தொழிலை முன்னேற்றுவதில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்வு முதல்வரின் 2030 ஆம் ஆண்டின் தொலைநோக்கு பார்வைக்கான வளர்ச்சி, இலக்கினை அடைய எதுவாக இருக்கும். தமிழ்நாட்டு தொழில் முதலீட்டு கழகம் தொழிற்சாலை தொடங்க நிலம், தொழிற்சாலை கட்டிடம் மற்றும் இயந்திரங்கள் வாங்கவும் நடைமுறை மூலதனத்தையும் கடனாக வழங்கி உதவி வருகிறது. நிதி உதவி அளிப்பதோடு மட்டுமன்றி அதை தாண்டி தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கென பல வகையான ஆலோசனைகளை வழங்கி தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் முதலீடு செய்துள்ள தங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முதலீடுகளின் நீண்ட கால வளர்ச்சிக்கும் அதன் வெற்றிக்கும் வித்திடுகிறது என கூறினார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply