கோவையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் காப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் உள்ளன. இந்த அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் கோவை பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலை வருகிறது. குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால் வழக்கம் போல் இந்த ஆண்டும் குடிநீர் பஞ்சம் தொடர்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே நெல்லிபதி என்ற இடத்தில் விதிகளை மீறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணைகளை கட்டி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்ததும், மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டி வரும் தடுப்பணைகளால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறையும் என்றும், இதனால் கோவை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும் விவசாயிகளுக்கு போதிய பாசன நீர் கிடைக்காது என்றும் பொதுமக்களும் விவசாயிகளும் கடந்த ஆண்டு அச்சம் தெரிவித்தனர்.
இது குறித்து கேரளா அரசிடம் எதுவும் பேசாமல் தடுப்பணை கட்டும் முடிவை கைவிட வலியுறுத்தாமல் கோவை மக்கள் நலனுக்கு விரோதமாக திமுக செயல்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த ஆண்டு கோடைகாலம் வரும் முன்னரே கோவையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே கோவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டியுள்ள தடுப்பணைகளை தற்போதைய நிலை என்ன என்பதையும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அப்பகுதியில் கேரள அரசு மேலும் புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply