தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாளான இன்று மொழிப்பாடங்களான தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 363 பள்ளிகளை சேர்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
தேர்வுக்காக தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிக்காக 300 போ் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 137 துறை அதிகாரிகள், 137 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் பொதுத்தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பஸ் வசதிகள், மின்சார வசதிகள் தடையில்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. தோ்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் கட்டாயம் ஹால்டிக்கெட் எடுத்து வரவேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 12 ஆம் வகுப்பு மாணவிகள் கூறும்போது பொதுத்தேர்வுக்கு ஏற்ப தயாராகி உள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள், மாதிரி தேர்வுகள் எழுதியதால் அச்சமின்றி தேர்வு எழுதுவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply