டிசம்பரில் திறக்கப்படும் செம்மொழி பூங்கா.

கோவை செம்மொழி பூங்கா பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் மத்திய சிறை அருகே 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று காலை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்கள் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவ குரு பிரபாகரனிடம் இந்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே. என். நேரு, கோவையில் செம்மொழி பூங்கா தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2500 பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இது 85 சதவீதம் தேர்வு மூலமும் நிரப்பப்படும். மீதி 15 சதவீதம் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். இந்த பணிகள் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் கோவை மாநகராட்சி புதிய மேயர் குறித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலின் அறிவிப்பார். இன்று மதியம் அறிவிப்பு வெளயாகும். கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைக்காக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Loading