நாட்டு மஞ்சள் சாகுபடியில் மகத்தான லாபம் ஈட்டி கோவை பொறியாளர் அசத்தல். 

கோவை சிறுவாணி சாலையில் இருந்து சரியாக எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது நாதகவுண்டன்புதூர் கிராமம். இயற்கை அழகு மிளிரும் இந்த கிராமத்தில் உள்ள தணிகாசலமூர்த்தியின் தோட்டம் ஒரு பசுமை பிரதேசமாகவே காட்சி அளிக்கிறது. மஞ்சள் காய்கறிகள் பாரம்பரிய கிழங்கு வகைகள் பல வகையான மூலிகை மரங்கள் என திரும்பும் பக்கமெல்லாம் ஏதாவது ஒரு பயிர் பச்சை கட்டி நிற்கிறது. இந்த தோட்டம் மலை அடிவார பகுதியில் இருப்பதால் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் ஒரு ஆத்மார்த்தமான உணர்வை தருகிறது. தற்சார்பு வாழ்வு முறை என்பதற்காக இயற்கை முறையில் உணவு பொருட்களை விளைவித்து பயன்படுத்தி வருகிறார் விவசாயி தணிகாசலமூர்த்தி.  வம்சாவழி வழியாக எங்கள் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. தாத்தாவும், அப்பாவும் மஞ்சள் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். ஆனால் நான் கடந்து எட்டு வருடங்களாக தான் விவசாயம் பார்த்து வருகிறேன் நான் படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தற்பொழுது இன்ஜினியராக தான் வேலை பார்த்து வருகிறேன் வேலைக்காக பல மாநிலங்கள் சென்றிருக்கிறேன். 

எங்கு சென்றாலும்  நல்ல ஆரோக்கியமான உணவுக்காக அலைந்து திரிந்த எனக்கு ஒரு கட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. விவசாயம் செய்தாலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும்,  நஞ்சில்லா பொருட்களை விளைவித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என நினைத்து இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினேன். எங்களுக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் 1.75 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு இருக்கிறேன் இதில் கடந்த ஐந்து வருடங்களாக மஞ்சள் சாகுபடி செய்கிறேன் அதுவும் இயற்கை முறையில் விளைவிக்கிறேன். மஞ்சள் பத்து மாத பயிர் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்த எனக்கு விதைக்கிழங்கு மட்டும் இயற்கை முறையில் கிடைக்கவில்லை ஈரோடு, சேலம் பகுதிகளில் கிடைக்கும் மஞ்சள் விதை கிழங்குகள் அனைத்துமே செயற்கை முறையில் விளைவித்ததாக இருந்தது.

அதனால் அதை வாங்காமல் இயற்கை முறையில் விளைக்கபடும் மஞ்சள் விதை கிழங்குகள் எங்கு கிடைக்கும் என தேடினேன் நண்பர் ஒருவரின் உதவியால் கேரளாவில், ஆலப்புழா பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களால் மலைப்பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை 10 கிலோ வாங்கி வந்தேன் அதை எனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்தேன்.

தற்போது ஒரு டன் வரை விதைக்கிழங்குகள் என்னிடம் இருப்பது உள்ளது என்றவர், முழுக்க முழுக்க இயற்கை முறையில் தான், விவசாயம் முதல் அறுவடை வரை அனைத்துமே இயற்கை முறையில் தான் செய்து வருகிறேன் என தனது இயற்கை பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் நடவு செய்ய சராசரியாக 600 கிலோ விதைகிழங்குகள் வரை தேவைப்படும் இயற்கை முறையில் மஞ்சள் விளைவிப்பதால் மஞ்சள் நடவு செய்யப்படும் நிலத்தில் நடவுக்கு முன்பாக உயிர் உரங்கள்,  பசுஞ்சாணம் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரைசல்கள் என அனைத்தையும் சேர்த்து நிலத்தை தயார் செய்து அதன் பின் மஞ்சள் கிழங்கை நடவு செய்ய தொடங்கினேன். பொதுவாக எங்கள் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பும் விதைக்க தொடங்குவோம் இந்த முறையும் அந்த பருவத்தில் தான் மஞ்சள் விதைத்திருக்கிறேன். மஞ்சள் செடியை பொறுத்தவரை ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையே 1.5 அடி இடைவெளி இருக்க வேண்டும் அதேபோல் ஒரு மஞ்சள் செடி வரிசைக்கு அடுத்த மஞ்சள் செடி வரிசைக்கும் இடையே 2அடி இடைவெளி இருக்க வேண்டும் அந்த அளவில் விதைத்தால் மஞ்சள் நன்றாக வளரும் நான் எனது மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக வெங்காயம் பயிர் செய்து வருகிறேன். வெங்காயம் 3 மாத பயிர் என்பதால் ஒரே மாதத்தில் இரண்டு பயிர்களையும் விளைவித்து மூன்றாவது மாதத்தில் வெங்காயத்தில் இருந்து வருமானம் பார்க்கிறேன். 

மஞ்சள் தோட்டத்திற்கு ஒருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும் அடியில் கிழங்கு வைத்த பிறகு தண்ணீரை குறைவாக கொடுத்து வந்தாலும் பிரச்சனை இல்லை அதேபோல் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். உரம் என்று பார்த்தால் நான் இயற்கை உரங்களை தான் கொடுக்கிறேன் கடந்த எட்டு வருடங்களாக விவசாயத்தில் நிலத்தை இயற்கை முறையில் பழகுவதற்கு மூன்று வருடம் ஆனது தற்பொழுது எனது நிலம் தற்போது இயற்கை விவசாயத்திற்கு பழக்கபட்டுவிட்டது என்பதால் பெரிதான அளவில் பூச்சி தொல்லை இருப்பதில்லை. இந்த முறையில் நான் விவசாயம் செய்து வருவதால் ஒரு ஏக்கருக்கு எனக்கு 2.5 டன் அளவு மஞ்சள் விளைச்சல் கிடைக்கிறது. மஞ்சளை பொறுத்தவரை பலரும் அதிக நிலத்தில் அதாவது ஐந்து முதல் 10 ஏக்கர் நிலத்தில் தான் பயிடுவார்கள் அப்போதுதான் செலவிற்கு தகுந்தார் போல் வருமானம் பார்க்க முடியும் குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் அதிக இடத்தில் வைத்தாலும் செலவு ஒரே மாதிரியான தான் வரும் அந்த அளவுக்கு மஞ்சளை அறுவடை செய்து மஞ்சள் பொடியாக்குவதற்கு அதிக பக்குவம் தேவை ஆனால் நான் குறைந்த இடத்தில் மஞ்சள் சாகுபடி செய்வதில் குறைந்த அளவில்தான் லாபம் பார்க்க முடியும் ஆனால் இயற்கை முறையில் விலை வித்த பொருள்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதால் எனக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது என்கிறார். அறுவடை செய்த மஞ்சளை வேக வைத்து மீண்டும் அதை காய வைத்து தோல் நீக்கி சுத்தமான மஞ்சளாக மாற்றி அதன் பின் மஞ்சள் பொடியாக அரைத்து விற்பனை செய்து வருவதாகவும், இந்த முறையில் விற்பனை செய்வதால் ஒரு கிலோ மஞ்சள் பொடி ரூபாய் 440க்கு விற்க முடிகிறது என்கிறார். 

ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்வதற்கு 1.5 லட்சம் வரை செலவாகிறது மஞ்சள் நேரடியாக பொடியாக விற்பனை செய்து விற்பதன் மூலம் ஒரு நல்ல தொகையை லாபம் பார்க்க முடிகிறது, அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு நேரடி பழக்கமும் கிடைக்கிறது என்கிறார் இந்த விவசாயி.  மஞ்சள் பொடியாக விற்பணை செய்வதோடு அல்லாமல்  இயற்கை முறைக்கு விவசாயிகள் பொருட்களை விளைவிக்க வேண்டுமென்ற நோக்கில் மஞ்சள் விதை கிழங்குகளை விற்பணை செய்தும் வருகிறார்.

இதேபோல் மஞ்சள் பயிரிட்டது போக மீதமுள்ள இடத்தில் காய்கறி, பயிர்கள் பயிரிட்டு வருவதோடு தனது தோட்டத்தில் தனியாக இடம் ஒதுக்கி குறுங்காடு என்ற ஒன்றை உருவாக்கி அதில் மஞ்சள், வெட்டிவேர், வீட்டு காய்கறிகள், பழங்கள், மூலிகை செடிகள், கொடி காய்கள், கிழங்கு வகைகள், லெமன், கிரேஸ், கரிபலா, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் விதைக்கிழங்கு என சுமார் 230 வகையான செடி, கொடி, மரங்கள் என பராமரித்து வருகிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கு நஞ்சில்லா, பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற முயற்சியில் விவசாயத்தில் களம் இறங்கியுள்ளார் இந்த இஞ்சினியர் தணிகாசலமூர்த்தி.

Loading