புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை.

புத்தாண்டு தினத்தன்று ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக புகார் அளிக்க என புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தும் ஹோட்டல், கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுகொள்ளபட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ அல்லது குற்ற செயல்கள் குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 0422-2300970, 9498181213 அல்லது வாட்ஸ்அப் எண்ணான 8190000100 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள்கள் விற்பனை குறித்த தகவல்களை கிடைத்தால் கோவை மாநகர போலீசாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டப்பட்டுள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி தங்கள் பெயர் மற்றும் அடையாளங்களை தெரிவிக்காமல் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும்  புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர், போக்குவரத்து விதிமுறைகளில் மீறலில் ஈடுபடுவோர், குற்ற செயல்களில் ஈடுபடுவோர், போதை பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில்,  துணை ஆணையர்கள் மேற்பார்வையில் சுமார் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading