கிரடாய் அமைப்பு கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலையுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை நேற்று தாஜ் விவான்த்தா ஓட்டலில் நடத்தியது. அதில் கட்டுனர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போதுகோவையிலுள்ள தொழில்துறை உலகளாவிய தொழில்துறையோடு இணைந்துள்ளது. நாம் அவர்களோடு போட்டியிட வேண்டிய சூழலில் இருக்கிறோம். நம் நாடு தற்போது 3.7 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. நாம் மேலும் வளர்ச்சியடைந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் 13.5 சதவீதமாக நம் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் இருக்க வேண்டும்.
அப்போது தான், சீனா அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை நாம் 2042 ல் அடைய முடியும். அதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் அரசு வலுவாக இருக்க வேண்டும். அதில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள், திறமையான வேகமாக செயல்படும் வகையிலான, அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை வாக்காளர்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார். நம் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு, நம்மிடம் அதிக இளைஞர்களை வைத்திருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டில் பலமான, வலிமையான ஆட்சியை ஏற்படுத்தினோம். அதனால் நாம் மனநிம்மதியுடனும், பயமின்றியும் வாழ்ந்து வருகிறோம். மேலும் பலமான மத்திய அரசை நாம் தேர்வு செய்தால் நம் நாடு எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டும். தற்போது வளர்ச்சியடைந்த நகரங்களின் பட்டியலை பார்க்கும் போது தமிழகத்தின் சென்னை, கோவை நகரங்கள் இடம் பெறாதது வேதனையாக இருக்கிறது.
கோவை மீண்டும் உலக அளவில் அதிக வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக மாறும், அதற்கான பணிகளை தற்போதே துவங்கிவிட்டேன். அப்படி மாறினால் இங்குள்ள தொழில், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என்று பல்துறை வளர்ச்சியை எட்டிபிடிக்கும்.மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலேயே உள்ளது. இதுவரை தமிழகம் இரண்டாவது இடத்திலேயே இருந்தது. தற்போது உ.பி இரண்டாவது இடத்திற்கும், தமிழகம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இந்நிலை மாற வேண்டும் தமிழகம் பழைய நிலையை அதாவது இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் அதன் பின்பு முதல் இடத்தை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். தற்போது இங்குள்ள கட்டுமான அமைப்பை சேர்ந்தவர் பல கேள்விகளை எழுப்பினீர்கள். அதற்கெல்லாம் நான் மனுக்களை வாங்கி மத்திய அரசிடம் கொடுத்து நிறைவேறும் என்று சொல்லி காலம் கடத்துபவன் அல்ல. நீங்கள் ஓட்டுபோட்டு வெற்றிபெற செய்திருக்கிறீர்கள்.
மக்களது உரிமை அதனால் அமைச்சர்களை கோவைக்கே அழைத்து வந்து தங்களது கோரிக்கைகள் என்ன என்பதை பேசச்செய்து அதற்கான தீர்வையும் காணச்செய்வேன். மற்றொரு முறை அந்த கோரிக்கைகள் திரும்ப வராதவாறு பார்த்துக்கொள்வேன்.
இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார். கோவை மக்களவை தொகுதி பா.ஜ வேட்பாளருடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை கிரடாய், சிபாகா, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இதில் கிரடாய் தலைவர் குகன்இளங்கோ, சிபாகா நிர்வாகி சகாயராஜ், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கணேஷ்குமார் மற்றும் திரளான கட்டுமான அமைப்புகள் கட்டுனர்கள் கலந்துகொண்டனர்.
Leave a Reply