கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாலகிருஷ்ணன், அதிமுக பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டாலும் “பி” டீமாக செயல்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இம்முறை அதிமுகவால் பெற முடியாது. முத்தலாக், சிஐஏ, காஷ்மீர் விவகாரங்களில் அதிமுக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என கூறி ஏமாற்ற பார்க்கிறது. பாஜக மற்றும் அதிமுகவினர் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது. கோவை உட்பட ஏற்கனவே இருக்கும் இரண்டு தொகுதிகளையும், கூடுதலான தொகுதிகளையும் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் கேட்டு பெறுவோம்,தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெறும் என்றார்.
உண்மைக்கு மாறான விடயங்களை மோடி துவங்கி அண்ணாமலை வரை பேசி வருகின்றனர், அண்ணாமலையின் மூளைக்கு எதுவும் தெரியாது, காவேரி டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஞானமே இல்லாமல் ஞான சூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் பங்களித்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா அல்லது பாஜகவா என பகிரங்கமாக விவாதிக்க அண்ணாமலை தயாரா?, சிறுகுறு தொழில் முனைவோரின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு பல மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் மாறும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு தொழில் முனைவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் கடன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை மாநில அரசிடம் வலியுறுத்தி குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வைத்தோம். விவசாய போராட்டத்தை முன்னெடுத்த அருண் என்கிற நபர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்றார்.
திமுக கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் உள்ளது. போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Leave a Reply