கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர்களுக்கான ஆலோசணை கூட்டம் கோவை குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்தியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கட்சியின் கொள்கைகள்,பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் குறைகள் ஆகியவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,அதிமுக வில் பூத்துக்கு இரண்டு பேர் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அரசியல் கட்சியினருக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மிக முக்கியமான ஒன்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.தேர்தலிலும் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக தகவல் தொழில்நுட்ப பிரிவு இருப்பதாகவும் திமுக, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் குறைவான ஆட்களே உள்ள நிலையில் அதிமுகவில் தான் அதிக அளவு உறுப்பினர்கள் உள்ளதாகவும் இந்தியாவிலேயே பெரிய கட்சியாக அதிமுக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக நமது தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த சாதனைகளை சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அதை விரைவாக அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.மேலும் அனைத்து விஷயங்களிலும் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று வருவது போல தகவல் தொழில்நுட்ப பிரிவும் சிறப்பாக செயல்பட வேண்டும்., நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் தகவல்களை பதிவிட வேண்டும் எனவும் தன்னையோ அல்லது இங்குள்ள நிர்வாகிகளை புகழ்ந்து பதிவு போடுவது உங்கள் பணி அல்ல., பொதுச் செயலாளர் பற்றியும், கட்சியை பற்றியும், திமுக மீதான விமர்சனங்கள், நமது சாதனைகளையுமே பதிவிட வேண்டும் அதுதான் முக்கியம் என்றும் வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் அதிமுக வில் தான் அந்த வாய்ப்பு உள்ளதாகவும் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் ஷாட்ஸ், ரீல்ஸ் பதிவிட வேண்டும் அதிமுக கழக பதிவுகளை லைக் ஷேர் செய்ய வேண்டும்., ஸ்டேட்டஸ் போட வேண்டும்., அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் ஏழு மாவட்டங்களை தானே நேரடியாக கண்காணிப்பேன் என்பதால் நிச்சயமாக நமது தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அதிகளவு பதிவுகளை பதிவிட வேண்டும்., சிறப்பான பணி செய்தால் சிறந்த எதிர்காலம் இருக்கும் எனவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் இன்று ஒரு கோடி வாக்காளர்களை கவரக்கூடிய சக்தி இணையதளத்திற்கு தான் உள்ளது என தெரிவித்தார்.கொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காலியாக உள்ள விலவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது தான் துவங்கியுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறும் என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைவதாக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வதந்தி பரப்பி வருவதாகவும் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்து தினிப்புகளே ஊடுருவதாகவும் குற்றம் சாட்டினார்
Leave a Reply