கோவை மாவட்டத்தில் விதி மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் உரிமம் காலாவதியான பின்னரும் செயல்பட்டு வருகிறது.  விதிமுறைகள் மீதி செயல்படும் கல்குவாரிகள் மீது கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த பகுதிகளில் கிராவல் மண் செம்மண் கடத்தல் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு மரத்தில் ஏறி பாக்குகளை திருடும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். காரமடை பகுதி தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் காகித தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும், பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி கிராமம் குட்டையில் சட்டத்துக்கு புறம்பாக மண் கடத்தலை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரமடை தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கோபனாரி, கொடுங்கேரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் இது கேரளாவிற்கு விவசாயிகள் செல்ல இணைப்பு பாலமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். 

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக அளித்த மனுக்கள் நடவடிக்கை எடுக்காமல் பல நாட்களாக நிலுவையில் உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படாமல் இருப்பது தான் காரணம் எனவும் தாமதம் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும்  பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் பணிகள் முழுமையாக முடியவில்லை எனவும் தற்பொழுது தற்காலிக அடிப்படையில் தான் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

மேலும் மண்பரிசோதனை செய்ய ஒவ்வொரு கிராமத்திலும் முகாம் அமைக்கவும், புளியமரம், ஜாதிக்காய், பாக்கு ஆகியவை மரக்கன்றுகளை மானியத்தில் வழங்கவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்கவும் நீர்வழிப் பாதை சர்வே செய்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும், தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலக சர்மிளா, வேளாண்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Loading