கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர்கள்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 1 ஆம் தேதி நாடு தழுவிய தூய்மை இயக்கத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத்தளம் அருகே உள்ள காடாம்பாடி கிராமத்தில் இந்திய விமானப்படை சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது. இதில் விமானப்படை அதிகாரிகள் கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சிறுவர்களுடன் இணைந்து விமானப்படை வீரர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் விமானப்படை தளத்தின் தலைமை அதிகாரி விவர்த் சிங், மினி மராத்தானில் பங்கேற்ற சிறுவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கியதுடன், இந்திய விமானப்படை சார்பில் 50க்கும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், கிராம மக்களுடன் இணைந்து இந்திய விமான படை வீரர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது போன்ற செயல்பாடுகள் பொதுமக்களுக்கும் விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் மற்றும் தேசத்தை கட்டி காப்பதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் என வலியுறுத்திய அவர், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை எப்போதும் முழு மனதுடன் ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூலூர் விமானப்படை குரூப் கேப்டன் மன்வீந்திரா சிங் பேசுகையில், சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் காடாம்பாடி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுபட்டனர். 

சுமார் 300 கிலோ அளவுக்கு சாலையோர குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து விமானப்படை தளங்களிலும் இது போன்ற முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் காடாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Loading