மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் நடைபெறும் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.இது தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின்  தமிழக கள  ஒருங்கிணைப்பாளர்  திரு. முத்துகுமார் அவர்கள் கூறியதாவது, மக்களை பாதிக்கும் பல விதமான நோய்களுக்கு அவர்கள் உண்ணும் உணவே மூல காரணமாக உள்ளது. செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து அதில் விளையும் விளைப்பொருட்களின் சத்தும் குறைந்து வருகிறது.  இதேபோல, மண் வளம் குறைந்ததால் விவசாயிகளுக்கும் மகசூல் குறைந்து வருவாய் குறைந்துள்ளது. மேலும் அவர்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் சந்திக்கும் இதுப் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தீர்வாக அமையும். 

மேலும் ஒற்றை பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பலப்பயிர் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்படும்.  மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியை மண் காப்போம் இயக்கம் மூலம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் பல்வேறு விதமான இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி இதுவரை சுமார் 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா என்ற பெயரில் மாபெரும் விவசாய நிகழ்ச்சி ஒன்றை மதுரையில் நவம்பர் 5-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளோம். யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் தொடங்கி அதை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது வரை பல்வேறு அம்சங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். 

குறிப்பாக, நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்வது குறித்து பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் பேச உள்ளார். மேலும் இயற்கை சந்தை ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி நடத்தி வருபவர் பல்லடம் விவசாயி திரு. பொன் முத்து. இவர் உருவாக்கியிருக்கும் சந்தையின் மூலம் தற்சமயம் 1000 மேற்பட்ட நுகர்வோருக்கு காய்கறிகள் வழங்கி வருகிறார். ஒரு விவசாயி இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து திரு. பொன் முத்து பேசுவார், பாரம்பரிய காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து காய்கறி வைத்தியர் திரு. அருண் பிரகாஷும், மிளகாய் வத்தல் உற்பத்தி செய்து அமெரிக்க, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திரு. ராமர் அவர்கள்  மிளகாய் வத்தல் சாகுபடி குறித்தும்  ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இதுதவிர, முருங்கை இலை மூலம் 2 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி திருமதி. பொன்னரசி உள்ளிட்டோர் வீட்டு தோட்டம், பந்தல் காய்கறிகள் மற்றும் கீரை சாகுபடி என பல்வேறு அம்சங்கள் குறித்தும் பேச உள்ளனர். அத்துடன், இதில் நாட்டு காய்கறி விதைகள் மற்றும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நாட்டு காய்கறிகளின் விதைகளை இலவசமாக வழங்க உள்ளோம். விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன் பெறும் விதமாக காய்கறிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைபெறும். மரபு இசை கலைஞர் திரு. சவுண்ட் மணி அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 8300093777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறினார்.

Loading