புஷ்பா பட பாணியில் லாரியில் சந்தனக்கட்டைகள் கடத்தல். சேஸ் செய்து பிடித்த கோவை போலீசார்.

சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலை வெள்ளளூர் பிரிவு பகுதியில் கோவை மாநகர காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனத்தை சோதனைக்காக நிறுத்திய போது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சேஸ் செய்து சென்று சேலம் ஆத்தூர் அருகே அந்த லாரியை மறித்து சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் ரகசிய அறை அமைத்து அதில் மூட்டை மூட்டையாக சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தனகட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கோவை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.பின்னர் கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், கேரளாவில் இருந்து லாரி மூலம் சந்தன மரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டதாகவும் நிற்காமல் சென்ற லாரியை சேலம் வரை பின் தொடர்ந்து சென்று பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர். மொத்தம்
57 மூட்டைகளில் 1051 கிலோ அளவிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த மனோஜ் என்பவரை கைது செய்துள்ளதாகவும் கூறினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் சத்தியமங்கலத்தில் உள்ள வனத்துறை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், அங்கு சந்தன கட்டைகளின் மதிப்பு குறித்து அளவீடு செய்யப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் ஓட்டுநரிடம் மனோஜிடம் தொடர் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading