தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் இளமறிவியலில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட உடனடி மாணவர் சேர்க்கை வருகின்ற 10.10.2023 ம் தேதி நடைபெற உள்ளதாக வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 10.10.2023ம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கான வருகை பதிவேடு காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிபந்தனைகளாக, இந்த உடனடி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் எனவும் நகர்வு முறை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்று கலந்தாய்வினை தவறவிட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம் எனவும் பொது கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்று ஏற்கனவே சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள் கலந்து கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களில் SC/ST/SCA பிரிவு மாணவர்கள் 1500 ரூபாய் மற்றும் இதர பிரிவினர் 3000 செலுத்த வேண்டும் எனவும் இணைப்பு கல்லூரிகளுக்கான ஆண்டு கட்டணம் இறுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம் நீங்கலாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி மாணவர் சேர்க்கை நாளன்று, இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும் எனவும் இணைப்பு கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிட கட்டணம் குறித்த விவரங்களை மாணவர்கள் இணைப்பு கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வருகை பதிவேடு குறிக்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப் படிப்பினை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம் எனவும் பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதியின் அடிப்படையிலும் மற்ற கல்லூரி வாயிலாக கல்லூரி கிலோ அணைத்து இடங்களும் நிரப்பப்பட்டவுடன் காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற்ற ஒரு வார காலத்திற்குப் பிறகு மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏதேனும் இருந்தால் மீண்டும் ஒரு உடனடி மாணவர் சேர்க்கை தற்பொழுது அறிவிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளது. உடனடி இட ஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை அக்டோபர் 9ம் தேதி அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply