தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் வருகின்ற 10.03.2024 அன்று முதல் ஒருவாரத்திற்கு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி என்ற தலைப்பில், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வருகின்ற 10.03.2024 முதல்  ஒருவாரத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,  அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன. 

மேலும், இக்கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.இப்புகைப்படக் கண்காட்சியினை  வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை தொடங்கி வைக்க உள்ளார்.  அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading