கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதன் மாநிலத் தலைவர் மௌலவி ஹனிபா, ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சமூக சமய வேறுபாடுகள் இன்றி நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் மக்களின் தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டு நாட்டு மக்களிடம் விவாத பொருளாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.நாட்டில் தற்போது நிலவும் சூழல், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு சவால் விடும் வகையிலும் மக்களாட்சிக்கு எதிராக எதேச்சதிகாரப் போக்கில் நாடு சென்று கொண்டிருக்கும் பேராபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அனைவருக்குமான வளர்ச்சியை அடிப்படையாக வைத்து பத்து அம்சங்களை வலியுறுத்தும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருப்பதாகவும் குறிப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, உடை ,உறைவிடம், கல்வி, மருத்துவ வசதி ஆகியவை முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதேபோல் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பன போன்றவை தங்கள் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பெற்றிருப்பதாகவும் சுட்டி கட்டினார்.
பயங்கரவாத செயல்களுக்கு வித்திடுகின்ற உண்மையான காரணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து நாட்டு மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கொலை கொடுமைகள், வன் செயல்கள்,காவல் துறையினரின் அராஜகங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தற்போது வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து வழங்க இருப்பதாகவும் தங்களது ஆதரவு என்பது குறிப்பிட்ட கட்சிக்கு என்று இல்லாமல் வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் வேட்பாளர்களுக்கான ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய பெண்களின் ஆதரவு தங்களுக்கு நிச்சயமாக இருக்கும் என்று கூறிவரும் நிலையில் அது இருக்குமா என்பது அவர்களுக்கே தெரியும் எனவும் அவர் பதில் அளித்தார்.
Leave a Reply