உலக காச நோய் தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு மருத்துவமனைகளில் காச நோய் தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையிலும் காச நோய் தினம் அனுசரிக்கப்பட்டது.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.நிர்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோய் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கூறியதாவது, காசநோயை ஏற்படுத்தும் கிருமியான மைக்கோபாக்டீரியம் டுயபர்குளோசிஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசு மற்றும் தமிழக அரசு காசநோயை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2025 க்குள் காசநோய் இல்லாத தமிழ்நாடு உருவாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு தமிழக அரசு “காசநோய் இறப்பில்லா திட்டம்” என்ற திட்டத்தை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் காநோயினால் இறப்பவர் விகிதம் குறைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 205 பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கடந்த வருடத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 13825 பேருக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 722 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு அனைவருக்கும் 100 சதவீதம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இந்நோயிற்கான சிகிச்சை முற்றிலும் இலவசமாக கோவை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் கோவை காசநோய் துணை இயக்குநர் மரு.சக்திவேல், கோவை அரசு மருத்துவமனை நுரையீரல் துறைதலைவர் மரு.கீர்த்திவாசன் மற்றும் மருத்துவர்கள் ஜெயக்குமார், புதுமலர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply